walkathon
விஷன்
ஒரு காலத்தில் ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக இருந்த நடை இன்று
மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு கட்டாய உடற்பயிற்சியாக மாறிவிட்டது.
10 கிலோ மீட்டர் தூரம் என்றாலும் நடந்தே சென்ற மனித இனம் இன்று 10 மீட்டர்
தூரத்திற்கு கூட வாகனங்களை நாடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நம்
முன்னோர்களின் வாழ்வில் நடை அன்றாட பழக்கமாக இருந்த காலகட்டத்தில் அவர்கள்
நோய் நொடியின்றி வாழ்ந்தனர். இன்றைய விஞ்ஞான உலகத்திலோ நடை பழக்கம் மறந்து
விட்ட நிலையில் மனிதர்கள் ஆரோக்கியம் குன்றி நீரிழிவு நோய், இதய நோய். உடல்
பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்காளல் பாதிக்கப்பட்டவர்களாய் மருத்துவமனைகளை
நோக்கி சாரை சாரையாய் பயணித்து வருகின்றனர்.
வாகனத்தில் பயணிப்பது கெளரவச் செயலாகவும், நடப்பது கெளரவக் குறைச்சலை போன்றும்
மனித இனம் நினைக்கத் தொடங்கியதால் மனிதர்களின் விலைமதிப்பற்ற ஆரோக்கியம்
சீர்கெட்டு விட்டது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் நடை பயிற்சியை கட்டாயமாய்
வாழ்வின் ஒரு அங்கமாக அனைவரும் பின்பற்றுவது கடினமான ஒன்றாக இருந்தாலும் கூட
நடை பயிற்சியை நம் உடலை காக்கும் உடற்பயிற்சியாக மனதில் நினைத்து அதை
தேவைப்படும் போதெல்லாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறிது தூரத்திற்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்து செல்வதும், வேலை
செய்யும் இடங்களில் லிப்டுகளை உபயோகப்படுத்தாமல் மாடிப்படிகளில் நடந்து
செல்வதும் நமது உடலுக்கான உடற்பயிற்சியாக ஒரு புறம் கருதப்படும் அதே வேளை,
வாகனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதன் மூலம் நம் நாட்டின் எரிபொருள்
தேவையின் குறைபாட்டை சற்றே நிவர்த்தி செய்யவும், வாகனங்களின் புகையால்
உண்டாகும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் வழி செய்யும் என்பதை நாம்
புரிந்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய நடைபயிற்சியால் நமது உடல்நலத்துக்கும், நம்
சுற்றுச்சூழலுக்கும் பெரும் நன்மைகள் ஏற்படும் என்பதை வலியுறுத்தும் விதமாக
உலக அமைதியின் சின்னமான மகாத்மா காந்தியடிகள் தனது வாழ்நாளில்
பின்பற்றியதும், அனைவரையும் பின்பற்ற வலியுறுத்தியதுமான இந்த எளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியை
குறித்ததான சென்னை வாக்கத்தான் என்ற நிகழ்வை காந்தி உலக மையம் நடத்துகிறது.
மகாத்மா காந்திஜியின் அன்பு. அகிம்சை கொள்கைகளை போல அவர் வலியுறுத்திய
நடைபயிற்சியும் எளிமையானது என்பதோடு, இப்பயிற்சி அனைவரும் பின்பற்றக்
கூடியதும், இக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதும் என்பதால் மகாத்மா காந்தி தமது
வாழ்நாளில் பின்பற்றிய நடைபயிற்சியை நாமும் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
உடற்பயிற்சிகளின் இளவரசன் நடைபயிற்சி என்று நடைபயிற்சியை பற்றி மகாத்மா காந்தி
குறிப்பிடுவார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தி நடைபயிற்சி
செய்தவர், லண்டனில் அவர் வக்கீலுக்கு படித்த காலத்தில் தினமும் 8-10 மைல்
தூரம் நடந்து வந்தவர். இந்த பழக்கத்தால் தான் காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு
சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு அவரது உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்
தனது 60வது வயதிலும் 241 மைல் தூரம் நடந்து முடித்தார். நடைபயிற்சியை
தனது அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக மகாத்மா பின்பற்றியதால் தான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் நோய்நொடியின்றி ஆரோக்கியமாகவும், மன வலிமையோடும் வாழ்ந்தார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நடைபயிற்சியை நாமும் பின்பற்றினால் நம் ஆரோக்கியம்
தழைப்பதோடு நம் நாடு ஆரோக்யமான மக்களால் நிரம்பி வலிமையான பாரதத்தை உருவாக்க
வழிசெய்யும்.
மிஷன்
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடைபயிற்சி அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக மாறக்கூடிய சூழலை ஏற்படுத்த துவக்கப்பட்டதே காந்தி உலக மையத்தின் இந்த சென்னை வாக்கத்தான். இந்த நல்ல நோக்கம் நிறைவேற இது குறித்த விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலும் ஊட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடுவது போன்றவற்றை காந்தி உலக மையம் நடத்த உள்ளது. அதே போல சென்னை வாக்கத்தானை மும்பை மாரத்தான், தில்லி மாரத்தான் போன்று பல்வேறு நகரங்களில் பெருமையோடு கொண்டு செல்ல காந்தி உலக மையம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காந்தி உலக மையத்தின் இந்த முயற்சிகள் ஈடேறும் அக்காலம் வலிமையான பாரத சமூகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை. அந்த நல்ல நோக்கத்திற்கான முதற்படியே இந்த சென்னை வாக்கத்தான்.
சென்னை வாக்கத்தான் மற்றும் அதன் வரலாறு:-
நடைபயிற்சியின் அவசியத்தை உணர்த்தும் வண்ணம் ஒவ்வோர் ஆண்டும் காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி மாதம் 30ஆம் தேதி சென்னை வாக்கத்தானை நடத்த காந்தி உலக மையம் முடிவெடுத்து செயல்படத்தி வருகிறது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டில் நடை நோய்க்கு தடை (“Walking a Mile Makes you smile“) மற்றும் நமது உடல் நலத்திற்காகவும் நாட்டின் ஒற்றுமைக்காகவும் சிறிது தூரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள் ("Walk a Mile for health and harmony") என்ற தலைப்புகளில் காந்தி உலக மையத்தின் சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நடைபேரணி நடைபெற்றுள்ளது. இதனை முறைப்படுத்தி 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்திஜியின் நினைவு நாளான ஜனவரி-30ஆம் நாள் சென்னை வாக்கத்தானை போன்ற நிகழ்வுகளை நடத்த காந்தி உலக மையம் திட்டமிட்டுள்ளது. காந்தி உலக மையம் நம் நாட்டு மக்களின் உடல் நலனை குறித்து முன்னெடுத்துள்ள இந்த ஆரோக்கியமான நிகழ்விற்கு உங்கள் மேலான ஆதரவையும், ஆலோசனைகளையும், பங்களிப்பையும் மனமுவந்து தந்திட அனைவரையும் வருகின்ற 2014 ஜனவரி-30ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் காந்தி உலக மையத்தினர் நடத்தும் சென்னை வாக்கத்தானிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.. தினமும் நடந்து பழகுங்கள் - நோய்கள் உங்களை விட்டு விலகி நடக்க பழகும்...